Monday, October 7, 2024

பட்டத்தி மைந்தனின்,"மரியாதை ராமன் தனது நுணுக்கமான கேள்விகளால் குற்றவாளியின் பொய்களை வெளிப்படுத்தி நீதியை நிலைநாட்டிய சாமர்த்திய தீர்ப்பு கதைகள்"

 


மூதாட்டி மற்றும் திருடர்களின் அறிமுகம்:


அந்த மூதாட்டிக்கு வயது எழுபதுக்குக் குறைவில்லை, இருந்தாலும் நல்ல திடகாத்திரமாகத் தான் இருந்தாள். அவள் தன்னுடைய சிறிய நிலத்தில் பயிரிட்டு வந்ததுடன் காலையிலும் மாலையிலும் ஊரின் எல்லையில் சிறிய ஆப்பக்கடை யொன்றும் நடத்தி வந்தாள். இதுதான் அவள் வயிற்றுப் பிழைப்பாக ஆகிவிடவே, மிகவும் அக்கறையுடன் ஆப்பக்கடையை நடத்தி வந்தாள். "ஆப்பம் என்றால் ஆனந்த ஆச்சிக்கடையின் ஆப்பம் போல வராது" என்று கூறுவார்கள். அவ்வளவு சுவைபடைத் தயாரிப்பாள். ஆப்பத்திற்கு, அவளே ஆட்டு உரலில் அரைத்துத் தன் தோட்டத்துத் தென்னை மரத்திலுள்ள இளநீரையும் விட்டுத் தயார் பண்ணுவாள். இவைகளையெல்லாம் முந்திய நாளே தயார் செய்துவிடுவதால் மாவு நன்றாகப் பொங்கிப் போயிருக்கும். எனவேதான் ஆனந்த ஆச்சியின் ஆப்பக்கடைக்கு அவ்வளவு புகழ்: பெயர் எனலாம். ன்று அந்தக் கடைக்கு நான்கு புதியவர்கள் வந்தார்கள். அவர்கள் பார்ப்பதற்கு முரடர்கள் போலத் தோன்றினார்கள். அவர்கள் உண்மையிலேயே முரடர்கள் தான்; முரடர்கள் மட்டுமல்ல திருடர்களும் கூடத்தான்.

முதலில் அவர்கள் ஆப்பக்கடைக்கு வந்து நன்றாகச் சாப்பிட்டார்கள். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ஒரு பித்தளைத் தோண்டியை அந்தக் கிழவியிடம் கொடுத்து "பாட்டி. உங்களை நம்பி இந்தத் தோண்டியை ஒப்படைக்கிறோம். இந்தத் தோண்டியை நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்தால் தான் கொடுக்க வேண்டும். இந்தத் தோண்டியில் மிகவும் முக்கியமான பொருட்கள் உள்ளன: ஆகவே எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்தால் தான் இந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும்" என்று நால்வரில்...ஒரு முரடன் பேசவும். அதற்கு மற்ற மூவர்களும் தங்கள் முழுச் சம்மதத்தைத் தலையாட்டியும், "ஆமாம்" போட்டும் தெரிவித்தார்கள்.!எனக்கென்னப்பா, நீங்க கொடுக்கச் சொன்னா கொடுக்கிறேன். கொடுக்க வேண்டாம் னா கொடுக்கல்லை; இவ்வளவு தானே; நீங்க நிம்மதியாப் போய் உங்க வேலையைப் பாருங்க" என்று சொல்லி அனுப்பினாள். அந்த நான்கு முரடர்களும் தங்கள் வேலையைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்கள் அந்தப் பாட்டியிடம் விடை பெறுவதற்கு முன்னால் அவர்களில் ஒருவன் மீண்டும் அந்தப் பாட்டியிடம் பேசினான். "பாட்டி, பாட்டி, மெத்தனமா இருந்திடாதே பாட்டி, நாங்க நால்வரும் இராப்பகலா உழைச்ச உழைப்பு பாட்டி அது; நாங்க நாலுபேரும் சேர்ந்து வந்து கேட்டாதான் கொடுக்கணும்" என்று கூறவும் அந்தப் பாட்டி மீண்டும் உறுதியாகக் கூறினாள். நீங்கள் நாலுபேர்களும் சேர்ந்து கேட்டால்தான் கொடுப்பேன்" என்றுகூறவும் அவர்கள் நிம்மதியடைந்தார்கள்.

"பாட்டி பாட்டி, உனக்கு ரொம்ப நாள் சிரமம் தர மாட்டோம்; இன்னும் கொஞ்ச நாள் இந்த வூரிலே தான் இருப்போம்; அதன் பிறகு வேற ஊருக்குப் போயிடுவோம்; அப்போ வந்து வாங்கிக்கிடுவோம்" என்று ஒருவன் கூறவும், பாட்டி, அவர்களின் "தோண்டி"யின் மதிப்பை உணர்ந்தாள். தோண்டி உண்மையில் கொஞ்சம் கனமாகத்தான் இருந்தது. சிறுகச் சிறுகச் சேர்த்த பணமாக இருக்கும்! ராப்பகலாக உழைத்த உழைப்பின் பலனாக இருக்கும்" என்று எண்ணிக் கொண்டே வீட்டின் உட்பக்கம் சென்று வைத்தாள்.

முனியாண்டியின் திருட்டுப் புத்தி:

ஒரு வாரம் சென்றிருக்கும்; அன்று காலையில் நான்கு பேர்களும் ஒன்றாக வந்து நன்றாகச் சாப்பிட்டார்கள். பின்னர் சிறிது தொலைவில் - அதாவது, பார்த்துக் கூப்பிடும் தொலைவிலுள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து "சீட்டு" விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பாதை வழியாக ஒரு தயிர்க்காரி மோர் விற்றுக் கொண்டு சென்றாள். உடனே அவளைப் பார்த்த ஒரு திருடன், "அண்ணே, மோர் வாங்கிச் சாப்பிடலாமா? நல்ல வெய்யில் காலம் தானே" என்று கூறியவண்ணம் ஆளுக்கொரு அலுமினியக் குவளையில் மோர் வாங்கிப் பருகினார்கள்."இந்த அம்மா இஞ்சி, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயமெல்லாம் போட்டுப் பிரமாதமா "சம்பாரம்" தயார் பண்ணியிருக்காங்க; இன்னும் கொஞ்சம் வாங்கி வச்சிக்கிடலாம். முனியாண்டி, நீ ஓடிப்போய் ஒரு மண் தோண்டி வாங்கிட்டு வா. அதிலே இந்தச் சம்பாரத்தை வாங்கி வச்சிக்கிடலாம்; கொஞ்சம் பொறுத்துக் குடிக்கலாம்" என்று கூறவும் முனியாண்டி விரைந்து சென்று தோண்டியைக் கேட்டான். முனியாண்டி போகும் போதே அவனுடைய திருட்டுப் புத்தி வேலை செய்தது. அந்தக் கிழவியிடம் கொடுத்து வைத்திருந்த தோண்டியை வாங்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்று எண்ணி அந்தப் பாட்டியிடம் சென்று, "பாட்டி, அந்தத் தோண்டியைக் கொடு பாட்டி, அவங்க எல்லாரும் சேர்ந்துதான் என்னிடம் தரச் சொல்லி அனுப்பினாங்க" என்றான்.

"என்னப்பா சொல்லுகிறே, நீங்க நாலுபேர்களும் சேர்ந்து வந்து கேட்டாத்தான் கொடுக்கணும்னு சொன்னீங்களே, இப்போ நீ மட்டும் வந்து கேட்டா எப்படிப்பா நான் கொடுக்க முடியும்?" என்று கேட்டாள்."உனக்கு நம்பிக்கை இல்லேன்னா பாட்டி, நீ கொஞ்சம் வெளியிலே வந்து நில்லு; நான் அவர்களுக்குக் குரல் கொடுக்கிறேன்; அவங்க மூன்று பேர்களும் சொன்னாக் கொடுத்தாப் போதும்" என்று வெளியே வந்து நின்று கொண்டு, "என்னப்பா, நீங்க மூணு பேரும் சொன்னாத்தான் தோண்டியைக் கொடுப்பாங்களாம்" என்று கூறவும், அவர்கள் மூவரும் அங்கிருந்து கையசைத்தார்கள். அவர்களில் ஒருவன், "பாட்டி, தோண்டியைக் கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தனுப்பு பாட்டி" என்றான்.

"என்னப்பா நீங்க, அன்னைக்கு என்ன சொன்னீங்க. இன்னைக்கு இப்படிச் சொல்றீங்க, எப்படியோ போங்க. உங்க தோண்டியாச்சி, நீங்களும் ஆச்சி" என்று கூறியவண்ணம் அவர்கள் கொடுத்த பணம் நிறைந்த தோண்டியைத் தூக்கி அந்த முனியாண்டியிடம் கொடுத்து விட்டு அவள் குடிசைக்குள் சென்று விட்டாள். அதன் பின்னரும் அங்கு நிற்பதற்கு அவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது! தோண்டியைப் புதியதாகவா நம்ம முனியாண்டி செய்கிறான்?" என்று கேட்டான் ஒரு திருடன். "இல்லை அண்ணே, இவன் குளத்திலே போயிக் களிமண் எடுக்கப் போயிருக்கிறான்" என்றான் அடுத்தவன்.

"வா வா போயிப் பார்த்திட்டு வரலாம்" என்றான் மூன்றாமவன். அவனுக்கு முனியாண்டி மீது சந்தேகம் வந்தது. ஆனால், அவன் வெளியே சொல்லாமல் அவர்கள் இருவரையும் பாட்டியின் குடிசைக்குக் கூட்டிக் கொண்டு போனான்.

அங்கு செல்லவும் முனியாண்டியைக் காணவில்லை. அவர்கள் மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

"எங்கே பாட்டி அந்த முனியாண்டிப் பயல்?" என்றான் ஒருவன்.

"அவன் அப்போதே தோண்டியை வாங்கிட்டுப் போயிட்டானே!" என்றாள் பாட்டி.

"எந்தத் தோண்டி?" என்றான் திருடர்களில் ஒருவன்.

"வேறு எந்தத் தோண்டி? நீங்க என்னிடம் தந்து வைத்த தோண்டிதான்" என்றாள் நிதானமாக.

பாட்டி நிதானமாகத்தான் கூறினாள்; ஆனால், அவர்களோ அவள் மீது ஆத்திரப்பட்டனர். "என்னப் பாட்டி இது? நாங்கதான், ரொம்பவும் தெளிவாச் சொன்னோமே, நாங்க நாலுபேரும் சேர்ந்து வந்தாத்தான் கொடுக்கணும்னு!" "ஆமா, ஆமா; சொன்னீங்க. கொஞ்சம் முன்னாலே நான் வெளியே வந்து நின்னு தோண்டியைக் கொடுக்கட்டுமான்னு கேட்டப்போ மூணுபேரும் சேர்ந்து கையை அசைச்சீங்களே கொடுக்கலாம்னு! உங்களில் ஒருத்தன் தோண்டியைச் சீக்கிரமாக் கொடுத்தனுப்புன்னு கத்தினானே! அதனாலேதான்கொடுத்தேன். சீட்டு விளையாடற சந்தோசத்திலே உங்களாலே எழுந்திருச்சி வரமுடியல்லே! இப்போ என்னடான்னா ஏன் கொடுத்தேன்னு கேட்டு என்னை மடக்கப் பார்க்கிறீங்களாக்கும்!" என்று ஆத்திரமுடன் கேட்டாள். "நான் இந்தத் தோண்டியைச் சொல்லவில்லை பாட்டி"

என்றான் தோண்டியைக் கொடுக்கச் சொன்னவன்.

"வேற எந்தத் தோண்டியை என்கிட்டே கொடுத்து வச்சீங்க? என்று எதிர் கேள்வி கேட்டாள் அவள். இவ்விதம் அந்தப் பாட்டி கேட்கவும் அவர்கள் மூவரும் எதையும் பேச முடியாமல் அவ்விதமே தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டார்கள். பின்னர், அவர்களில் ஒருவன் எழுந்து பாட்டியிடம் ஆத்திரமாகப் பேச ஆரம்பித்தான்.

"பாட்டி, எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அந்தத் தோண்டியை நீ தான் தரணும். நாங்க எல்லாரும் திரும்பத் திரும்பச் சொன்னோமே, நாலு பேரும் சேர்ந்து வந்து கேட்டாத்தான் கொடுக்கணும்னு; இப்ப நீ எப்படிக் கொடுக்கலாம்?" என்று ஆத்திரப்பட்டான். அவன் ஆத்திரப்படுவதிலும் பொருள் உண்டு என்பதை உணர்ந்து அந்தப் பாட்டி தெளிவாகப் பேசினாள்;

"என்னப்பா நீங்க? உங்க மூணு பேர்களுக்கும் கூப்பிடுகிற தூரத்திலிருந்து எழுந்திருச்சி வந்து தோண்டியைக் கேட்கிறதுக்கு முடியல்லை; அந்த முனியாண்டியை அனுப்பினீங்க. அப்படியிருந்தும் நான் உடனடியாக் கொடுக்கல்லை; கொடுக்கமுடியாதுன்னேன். பின்னே அவன் வெளியே என்னை வரச் சொல்லி அவனே உங்ககிட்டே சொன்னான் ஆமா, கத்தியே சொன்னான்; நீங்க மூணுபேரும் சொன்னாத்தான் கொடுப்பாங்களாம்னு உரக்கக் கத்தியே சொன்னான். அதுக்குப் பிறகாவது எழுந்திருச்சி வருகிறதுக்குப் புத்தி போகல்லை. இப்போ என்னடான்னா ஏன் கொடுத்தேன்னு என்கிட்டே கேட்கிறீங்க."என்று கூறவும், அவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பினர். அதன் பின்னர் அவர்களில் ஒருவன், "பாட்டி, நாங்க இந்த வழக்கை நீதி மன்றத்திற்குக் கொண்டு போகிறோம். அவரு என்ன சொல்லுகிறாரோ அதன்படி நடந்துக்க" என்றான் ஒரு திருடன்.

நீதிமன்றத்தில் வழக்கு- கிழவியின் வேதனை:

"வா, வா. நான் தயாரா இருக்கிறேன். நானும் உங்க கூடவே வருகிறேன். அந்த நீதிபதி என்ன சொல்கிறாருன்னு பார்க்கலாம்”என்று பாட்டியும் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவர்களுடன் சென்றாள்.

நீதிபதியிடம் அவர்கள் மூவரும் தங்கள் வழக்கைக் கூறினார்கள். அவர்கள் மூவரும் சொன்னபோது பாட்டி மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

வழக்கைக் கேட்ட நீதிபதி, பாட்டியிடம், "என்ன பாட்டி அவர்கள் நால்வரும் இவ்விதம் சொன்ன பிறகும் அதாவது நால்வரும் வந்து கேட்டால்தான் தோண்டியைக் கொடுக்க வேண்டும் என்று சொன்ன பிறகும் ஏன் பாட்டி கொடுத்தீர்கள்?" என்று கேட்டார்.

"உண்மைதான் அய்யா, இவங்க நாலு பேர்களும் கேட்டால்தான் கொடுக்கணும்னு சொன்னது உண்மைதாங்க அய்யா. ஆனா, ஒருவனை அனுப்பித் தோண்டியை வாங்கிட்டு வரச் சொல்லி விட்டு இவங்க மூணு பேர்களும் கூப்பிடற தொலைவிலே இருந்து சீட்டு விளையாடிட்டு இருந்தாங்க. தோண்டியைக் கேட்டவனிட்டே நான் முதல்லே கொடுக்கல்லை. நான் வீட்டைவிட்டு வெளியிலே வந்து நிக்கவும், தோண்டியைக் கேட்க வந்தவன் பாட்டி தரமாட்டேங்கிறாங்க, நீங்க மூணு பேர்களும் சொன்னாத்தான் கொடுப்பாங்கன்னு உரக்கக் கத்திச் சொன்னான். இவங்க மூணு பேர்களும் கொடுக்கிறதுக்குக் கையசைச்சாங்க; அதிலே இவன் "பாட்டி தோண்டியைக் கொஞ்சம் சீக்கிரமாகக் கொடுத்தனுப்பு பாட்டி" என்று உரக்கவே கத்திச் சொன்னான்; அதன் பிறகுதான் கொடுத்தேன்" என்று விளக்கமாகக் கூறினாள்.


நீதிபதிக்கு அவள் செய்கை சரியென்று படவில்லை. "பாட்டி, தவறு உன் பெயரில்தான். அவர்கள் சொன்னபடி நான்கு பேர்களும் வந்து கேட்டால்தான் கொடுத்திருக்க வேண்டும். நீ அவர்கள் சொல்லை மீறி விட்டாய். அவர்கள் நால்வரும் உன்னிடம் வந்து கேட்கவில்லை; ஒருவன் கேட்டான், இவர்கள் கையசைத்தார்கள். இவர்களில் ஒருவர் "கொடு" என்று கூறினான். அதனால் கொடுத்தேன் என்றெல்லாம் கூறுவது சரியல்ல. ஆகவே, அவர்களுக்கு நீதான் அந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும்; அல்லது அதனுடைய நஷ்டத்தைக் கொடுத்து ஈடு செய்ய வேண்டும்" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

தனக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும், நாம் செய்தது சரிதான் என்று நீதிபதி பாராட்டுவார் என்றெல்லாம் எண்ணி வந்த கிழவி வேதனையுடன் கண்ணீர் வடித்த வண்ணம் புலம்பியவாறு தெருவில் சென்று கொண்டிருந்தாள்.

ராமனின் அறிமுகம்:

அவ்வேளை அங்கு சில சிறுவர்கள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ராமன் என்ற கொஞ்சம் வயது வந்த சிறுவன், "ஏன் பாட்டி, ஏன் அழுகிறே, என்ன ஆயிற்று உனக்கு?" என்று மிகவும் பரிவுடன் விசாரித்தான். அந்தப் பாட்டி அவனிடம் நடந்தவைகள் அனைத்தையும் கூறினாள். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது.


பாட்டி சொன்ன விபரம் முழுவதையும் கேட்ட ராமன் கொஞ்சம் ஆத்திரமுடன் கூறினான். "இந்தத் தீர்ப்பு சரியான தீர்ப்பே அல்ல; அநியாயமான தீர்ப்பு, இந்தத் தீர்ப்பைக் கண்மூடித்தனமாகச் சொன்னவர் சரியான நீதிபதியே அல்ல; இதை மன்னரிடம் எடுத்துச் சென்றால் அவர் சரியான தீர்ப்புக் கூறுவார். உன்னை அந்த நீதிபதி அழவைத்து விட்டார்; இந்த வழக்கை விடக் கூடாது" என்றான் அவன்.

அந்தக் கூட்டத்தில் பொதுமக்களோடு சேர்ந்து அமைச்சர் மாறு வேடத்தில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு ராமன் என்ற அந்தச் சிறுவன் சொன்னது நியாயம் என்றே பட்டது. எனவே அவர் ராமனிடம், "வா தம்பி, நீ வந்து மன்னரிடம் இதைக் கூறி இந்தப் பாட்டியைக் காப்பாற்ற முயற்சி செய், உன்னை நான் அழைத்துச் செல்லுகிறேன்" என்று கூறிப் பாட்டியையும் ராமனையும் அழைத்துச் சென்று அரண்மனை வாசலில் இருவரையும் நிற்கச் சொல்லிவிட்டு அரண்மனையுள் சென்று மன்னரிடம் விபரத்தைக் கூறினார் அமைச்சர், அமைச்சர் கூறியதைக் கேட்ட மன்னர், உடனே அந்தச் சிறுவனை வரவழைத்து விசாரிக்கலாம், "அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. குடிமக்கள் அநியாயமாக நடத்தப்படக்கூடாது" என்று கூறவும் ஒரு சேவகனை அனுப்பிச் சிறுவனையும் பாட்டியையும் அழைத்துவரச் செய்தார். இருவரும் வந்து அரசரை வணங்கி நின்றார்கள். பின்னர் அரசர் ராமனிடம் "தம்பி நான் நடந்தவையனைத்தையும் அறிந்து கொண்டேன்; நீதிபதி அளித்த தீர்ப்பு தவறு என்று கூறுகிறாயே,

மரியாதை ராமனின் தீர்ப்பு:

நீயே நீதிபதியாக இருந்தால் என்ன தீர்ப்பு வழங்கியிருப்பாய். என்பதைச் சொல்லேன்" என்று மிகவும் கனிவுடன் கூறவும்: சிறுவன் ராமன் மன்னரை மீண்டும் வணங்கித் தெளிவாகக் கூற் ஆரம்பித்தான்.





"மன்னர் அவர்களே, என்னை முதலில் மன்னிக்கவும். நீதிபதியவர்களின் தீர்ப்பைக் குறை கூறியதாக எண்ணிவிடக் கூடாது. இவ்விதம் அவசரப்பட்டு நீதிபதி தீர்ப்பளிக்கவும் அதனால் பாதிப்படைந்த இந்தப் பாட்டிக் கண்ணீர் வடிக்கவும், இதைக் கண்டு பொது மக்கள் ஆத்திரமுடன் உங்களைத்தான் குறை கூறுவார்கள், உங்கள் ஆட்சியில் இவ்விதம் நடக்கிறதே என்று. அதனால்தான் அவ்விதம் கூறினேன்" என்றான். "சரி. அதெல்லாம் இருக்கட்டும்; உன்னை நான் குறை கூறவில்லை; ஏன் அவ்விதம் கூறினாய் என்றும் உன்னிடம் கேட்கவும் இல்லை; நீயாக இருந்தால் என்ன தீர்ப்பளிப்பாய் என்றுதான் கேட்கிறேன்; தயங்காமல் நிதானமாக உன் உள்ளத்தில் எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதைச் சொல்" என்று அவனுக்குத் தைரியம் சொன்னார்.


பின்னர் அவன் நிதானமாகக் கூறினான். "அரசே, அவர்களில் ஒருவன் தோண்டியைக் கேட்க வந்தான். பாட்டி முதலில் கொடுக்கவில்லை; பின்னர் பாட்டி வெளியே வந்து நிற்கவும், தோண்டியை ஏமாற்றிச் சென்றவன் அவர்கள் மூவரைப் பார்த்து "என்னப்பா, நீங்க மூணுபேர்களும் சொன்னாத்தான் பாட்டி கொடுப்பாங்களாம்" என்று கூறவும் அவர்கள் மூவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மும்முறத்தில் அங்கிருந்தபடியே கையசைத்திருக்கிறார்கள். பின்னர், அவர்களில் ஒருவன், "பாட்டி தோண்டியைக் கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தனுப்பு" என்று கூறியிருக்கிறான். இதன்படிதான் பாட்டி கொடுத்தனுப்பியிருக்கிறாள். இதை அந்த மூவரும் ஒத்துக் கொண்டார்கள்,"


இவ்விதம் அவர்கள் ஒத்துக்கொண்ட பிறகும், நீதிபதி அவ்விதம் தீர்ப்பளித்தது தவறு என்பதுதான் எனது பணிவான எண்ணமாகும்" என்றான் ராமன். "சரி, நீதிபதி அளித்த தீர்ப்பு தவறு என்றே வைத்துக் கொள்ளுவோம். உனது எண்ணப்படி இந்த வழக்குக்கு எவ்விதம் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதைக் கூறு" என்று மன்னர் வனுக்கு உற்சாகம் ஊட்டினார்.


"பாட்டியின் பேரில் எந்தத் தவறும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது; அந்த மூவரும் கையசைத்துக் கூறித் தெரிவித்த பின்னர்தான் பாட்டி அந்தத் தோண்டியைக் கொடுத்திருக்கிறாள். அதனால் நீதிபதி என்ன சொல்லியிருக்க வேண்டுமென்றால், நீங்கள் முதலில் பாட்டியிடம் சொன்னபடி நான்கு பேர்களும் சேர்ந்து வந்தால்தான் தோண்டி கிடைக்கும் என்று கூறியிருக்க வேண்டும். காரணம் என்னவென்றால். பாட்டியே இஷ்டப்பட்டு அவர்களில் ஒருவனிடம் தோண்டியைத் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. கூப்பிடும் தொலைவில் அவர்கள் நால்வரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவனை அனுப்பித் தோண்டியை வாங்கி வரச்சொல்லியிருக்கிறார்கள். அந்தத் தோண்டியில் அவ்வளவு முக்கியமான பொருள் வைத்திருந்ததால் அவர்கள் அவனை அனுப்பியிருக்கவே கூடாது. தோண்டியைக் கேட்கச் சென்றவன் வேறு யாருமல்ல; அந்த நால்வரில் ஒருவன்தான். அப்படியிருந்தும், அவன் கேட்டவுடன் தோண்டியை எடுத்துக் கொடுத்துவிடவில்லை; தரமுடியாது என்று மறுத்திருக்கிறாள்."


"அந்த நிலையில் தோண்டியைப் பெறச் சென்றவன் பாட்டியை வீட்டை விட்டு வெளியே வந்து நிற்கச் சொல்லிவிட்டு, அவர்கள் மூவரிடமும், "நீங்கள் மூவரும் சொன்னால்தான் பாட்டி தருவார்களாம்" என்று கூறியிருக்கிறான். பின்னர் அவர்கள் மூ வரும் சேர்ந்து கூறியிருக்கிறார்கள் தோண்டியைக் கொடுத்து அனுப்பும்படி, மேலும், அவர்களில் ஒருவன், "தோண்டியைச் சீக்கிரமாகவே கொடுத்து அனுப்புங்கள் பாட்டி" என்று கூறியிருக்கிறான். இவைகளை அந்த மூவரும் மறுக்கவில்லை. இந்தநிலையில், பாட்டி செய்தது தவறே இல்லை என்பதுதான் எனது எண்ணம். எனவே, இவைகளையெல்லாம் மனதில் கொண்டு அந்த நீதிபதி நீங்கள் நால்வரும் வாருங்கள், அப்போதுதான் தோண்டி கிடைக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும்." "மேலும் அந்த நான்காவது நபரை இவர்கள் ஏன் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை என்பதை எண்ணும்போது இவர்கள் நால்வரைப் பற்றியுமே சந்தேகம் வருகிறது. இவைகளையெல்லாம் மனதில் கொண்டு தான் நான்கு பேர்களும் வந்தால் தோண்டி கிடைக்கும் என்று நீதிபதி கூறியிருக்க வேண்டும் என்று கூறுகிறேன்" என்றான் அந்தச் சிறுவன்.


இவ்விதம் அவன் கூறவும், மன்னருக்கும் அமைச்சருக்கும் அந்தச் சிறுவன் கூறியது மிகமிகச் சரியென்றே மனதில் பட்டது. அதன் பின்னர் அந்தப் பாட்டியும், உடன் வந்த மூவரும் எங்கு இருக்கிறார்கள் என்று மன்னர் கேட்கவும், அவர்கள் அனைவரும் அரண்மனை வாசலில் நிற்பதாகக் கூறினான் அந்தச் சிறுவன். உடனே, ஒரு சேவகனை யனுப்பி அவர்கள் அனைவரையும் அழைத்து வரச் சொன்னார் மன்னர், அவர்கள் வந்ததும் மன்னர் அவர்களிடம் நிதானமாகப் பேசினார்.


அவர்களிடம் பழைய கதைகளைக் கிளறவில்லை. "நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் - அதாவது சேர்ந்துவந்து கேட்டால்தான் தோண்டி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினீர்கள் அல்லவா?” என்று கேட்டார் மன்னர்.

அவர்கள் மூவரும். "ஆமாம். ஆமாம்" என்று தலையசைத்தார்கள். "அந்த நான்காவது நபர் இப்போது எங்கே?" என்று கேட்டார் மன்னர், அதற்கு அவர்களால் சரியாகப் பதிலளிக்க முடியவில்லை.

"சரி, அவனைப்பற்றிக் கூற வேண்டாம். அவன் உங்களில் ஒருவன், நீங்கள் கூப்பிடும் தொலைவில் இருந்து கொண்டு தோண்டியைக் கொடுங்கள் என்று கூறியும் கையசைத்தும் சொன்னதன் அடிப்படையிலும்தான் பாட்டி கொடுத்திருக்கிறாள். ஆகவே, நீங்கள் நால்வரும் சேர்ந்து வாருங்கள்; அப்போதுதான் தோண்டி கிடைக்கும்; போய் வாருங்கள். பாட்டியிடம் மீண்டும் வந்து தோண்டியைத் தரவேண்டும் என்று மிரட்டுகிற வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்; போய் வாருங்கள்" என்று அவர்களை எச்சரித்து அனுப்பினார் மன்னர்.


இவ்விதம் மன்னர் கூறியதும், அந்தத் திருடர்கள் மூ வரும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணிக் கொண்டு, மேலும் மன்னர் அந்தத் தோண்டியில் என்ன இருந்தது, எங்கிருந்து கிடைத்தது என்று கேட்காமல் விட்டாரே என்று எண்ணியவர்களாய்ச் சென்று விட்டார்கள் பாட்டி, மன்னருக்கும். அமைச்சருக்கும் ராமனுக்கும் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றாள்.

பின்னர், அமைச்சரும் அரசரும் ராமனைப் பற்றி யார் என்ன என்று விசாரித்தார்கள். அவனுடைய படிப்பைத் தொடர வேண்டுமென்றும் மாலை வேளையில் அவன் நீதிபதியாகப் பணியாற்ற வேண்டுமென்றும் கூறினார் மன்னர்.


மேலும் அவனுக்குச் சிறப்பளிக்கும் வண்ணம் "மரியாதை ராமன்" என்று அன்று முதல் அழைக்கப்பட்டான். இவ்விதமாக மரியாதைராமன் நீதிபதிப் பொறுப்பை ஏற்றுத்திறம்பட நடத்தி வந்தான்.



"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


No comments:

Post a Comment

How a Simple Smile and Gentle Words Create Deeper Human Connections Than Material Gifts Ever Could in Everyday Life

  Thirukkural:  AganAmarndhu Eedhalin Nandre MugamAmarndhu  Insolan Aagap Perin Meaning : If a person has the nature to speak with a gentle ...